மழைக்கு முன் வேகவதி ஆறு தூர்வாரும் பணி..! ரூ.80 லட்சத்தில் அதிரடி நடவடிக்கை.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகரின் முக்கிய நீர்வழித்தடங்களில் ஒன்றாக விளங்கும் வேகவதி ஆற்றில், பருவமழையை முன்னிட்டு தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உள்ளிட்ட நீர்வரத்துகளை சுமந்து செல்லும் முக்கிய நீர்வழித்தடமாக வேகவதி ஆறு உள்ளது. மழைக்காலங்களில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில், நீரோட்டத்திற்கு இடையூறாக உள்ள செடி, கொடிகள் மற்றும் மண் படிவுகளை அகற்றும் வகையில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
மழைக்காலத்திற்கு முன்பாகவே வேகவதி ஆற்றை தூர்வார வேண்டும் என உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம், நீர்வளத்துறை அமைச்சரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, மழைக்கு முன்பாக பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் தற்போது வேகவதி ஆற்றில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுமார் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெறும் இந்தப் பணிக்காக ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூர்வாரும் பணிகள் நிறைவடைந்தால், மழைக்காலங்களில் ஆற்றில் நீர் தடையின்றி செல்ல வழிவகுப்பதுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்படக்கூடிய வெள்ளப் பாதிப்புகளையும் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக்குரல்