கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு! 22 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ச்சி!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அருண்ராஜ், புறநோயாளிகள் பிரிவு, பாத மருத்துவ மையம் மற்றும் மகப்பேறு சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றைப் பார்வையிட்டு, மருத்துவப் பயனாளர்களைச் சந்தித்து அவர்களிடம் உரையாடினார்.

மருத்துவமனையில் முன்மாதிரி முன்னெடுப்புகள்!

மருத்துவமனையின் ஆய்வகங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள டோக்கன் அடிப்படையிலான வரிசை மேலாண்மை முறை (Token Based Queue Management System), ரத்த மாதிரிகளை எளிதாகச் சேகரிப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முன்மாதிரியான முன்னெடுப்புகளை அமைச்சர் பாராட்டினார்.

ரூ.36.01 கோடியில் 75 அறிவிப்புகள்!

இந்த ஆண்டு மருத்துவத் துறையின் மானியக் கோரிக்கையின்போது, கன்னியாகுமரி மாவட்டத்திற்காக மொத்தம் ரூ.36.01 கோடி மதிப்பீட்டில் 75 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தாய்-சேய் நலக் கட்டிடத்திற்கு ரூ.12 கோடி செலவில் இரண்டு கூடுதல் தளங்கள் அமைப்பது உள்ளிட்ட அறிவிப்புகளுக்கான அரசாணைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

22 பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

தொடர்ந்து, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 22 குழந்தைகளுக்கு, தமிழ்நாடு முதலமைச்சரின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் தலா ஒரு கிராம் தங்க மோதிரங்களை அமைச்சர் அருண்ராஜ் அணிவித்தார்.

மேலும், குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கான ஊட்டச்சத்துப் பெட்டகங்களையும் வழங்கினார்.

அதிகாரிகள் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, துணைச் செயலாளர் ஆர். அழகு மீனா, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply