7 மாத அச்சத்திற்கு முற்றுப்புள்ளி: கோதை ஆற்றில் 300 கிலோ ராட்சத முதலை சிக்கியது!

கன்னியாகுமரி, செப். 21:

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகே கோதை ஆற்றில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்படும் சுமார் 300 கிலோ எடையுள்ள ராட்சத முதலை, வனத்துறையினர் அமைத்த வலையில் சிக்கியது.

கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு கோதை ஆற்றில் முதலை இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டறிந்து, அதன் காட்சிகளையும் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முதலையைப் பிடிக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

முதலை பிடிக்கும் நடவடிக்கைக்காக சென்னையில் இருந்து சிறப்பு குழுவும் வரவழைக்கப்பட்டது. கோழி மற்றும் ஆடு உள்ளிட்டவற்றை இரையாக வைத்து பொறி அமைத்தபோதும், முதலை அதில் சிக்காமல் தப்பியதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சிறப்பு குழுவினர் தொடர்ந்து அப்பகுதியை ஆய்வு செய்து, முதலை நடமாடும் பாதைகளைக் கண்டறிந்து பல்வேறு இடங்களில் வலைகளை அமைத்தனர்.

வலையில் சிக்கிய முதலை

இந்நிலையில், இன்று காலை நிலக்கல் ஆற்றுப்பாதை அருகே வனத்துறையினர் அமைத்திருந்த வலையில் முதலை சிக்கியது.

தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு திரண்டனர். பல மாதங்களாக நிலவி வந்த அச்சத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலை பிடிபட்டது, அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 300 கிலோ எடையுள்ள முதலையை, வனத்துறை ஊழியர்கள் கூடுதல் வலைகளின் உதவியுடன் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அது சீரோ பாயிண்டில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

வனத்துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

இதனிடையே, சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த முதலை சிறியதாக இருந்தபோது பல்வேறு இடங்களில் தென்பட்டதாகவும், அதுதொடர்பான காட்சிகளுடன் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

ஆனால், அந்தக் காட்சிகள் போலியானவை எனக் கூறி வனத்துறை தங்களது புகார்களை புறக்கணித்ததாகவும் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டு குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

தற்போது பிடிபட்டுள்ள முதலையை எங்கு கொண்டு சென்று விடுவது என்பது குறித்து வனத்துறையின் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply