குடமுழுக்கு விழா நெருங்குகிறது… மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்!

அமைச்சர் சீ.ரமேஷ் தலைமையில் ஆய்வு – பாதுகாப்பு, பக்தர்கள் வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை

மதுரை – செப்டம்பர் 16: மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து இன்று (16.09.2026) நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, குடமுழுக்கு விழாவை சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனையும் நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருக்கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வின்போது அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டது. விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வின்போது மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் உடனிருந்தார். மேலும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.வே. ராஜாராமன், இ.ஆ.ப., கண்காணிப்பு அலுவலர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசுச் செயலாளர் திரு.கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்ககத்தின் இயக்குநர் திரு.ப.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மரு.டி.ஜி.வினய், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கல்லாணை, மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.தங்கப்பாண்டி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.வி.கருப்பையா, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.எம்.கோபிசன், மாநகராட்சி மேயர் (பொ) / துணை மேயர் திரு.தி.நாகராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார், இ.ஆ.ப., ஆகியோரும் ஆய்வின்போது உடனிருந்தனர்.

குடமுழுக்கு விழாவில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள், பக்தர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. விழா நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளதையும், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உரிய காலத்திற்குள் நிறைவு செய்யப்படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஏற்கனவே பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடமுழுக்கு விழா சிறப்பாகவும், பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும் நடைபெறுவதற்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஆய்வின்போது வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திருக்கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

Leave a Reply