20 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றித் தவிக்கும் தென்றல் நகர் மக்கள்! தீர்வு காண கிராம மக்கள் கோரிக்கை.
மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊர் சேரி ஊராட்சியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் காலனி தென்றல் நகர் பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தென்றல் நகர் பகுதியில் தார்ச்சாலை, தெருவிளக்குகள், மயானத்திற்குச் செல்லும் பாதை மற்றும் முறையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாகப் பலமுறை கோரிக்கைகள் விடுத்தும், போராட்டங்களில் ஈடுபட்டும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அப்பகுதிக்கு நேரில் சென்ற ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) எனக் குறிப்பிடப்படும் அதிகாரி, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, சுமார் 20 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள அடிப்படை வசதிப் பிரச்சினைகளுக்கு மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என தென்றல் நகர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்