பெருங்கட்டூர் நூலகத்தில் பல்திறன் போட்டிகள்: மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூர் ஊர்ப்புற நூலகத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பல்திறன் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நல் நூலகர் ஜா. தமீம் தலைமை தாங்கினார். தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் திவ்யலட்சுமி, திவ்யபாரதி, லாவண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக நல்லாசிரியர் அ. முபாரக் கலந்து கொண்டு, மாணவர்கள் விடுமுறை நாட்களை பயனுள்ள வகையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், மாணவர்கள் விடுமுறை நாட்களில் நூலகத்திற்குச் சென்று பல்வேறு புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றும், வாசிப்பதன் மூலம் அறிவையும் திறன்களையும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், வாசிப்புப் பழக்கம் மாணவர்களின் அறிவுத் திறனை வளர்ப்பதுடன், அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் எழுதுபொருட்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பெருங்கட்டூர் ஊர்ப்புற நூலகத்தின் வாசகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் நூலக உதவியாளர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

Leave a Reply