தீயில் கருகிய வீடு… ஆவணங்கள் முதல் குழந்தைகளின் கல்விப் பொருட்கள் வரை அனைத்தும் சாம்பல்!
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ராந்தம் துரைராஜ் நகர் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடு முழுவதுமாக தீக்கிரையான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
மேலும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பயன்படுத்திய நோட்டுப் புத்தகங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் கல்விக்குத் தேவையான பொருட்களும் தீயில் கருகியுள்ளன. இதனால் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த துணிமணிகள், பீரோ, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவையும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. அதேபோல், உணவுக்காக வீட்டில் வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும் சமையல் பாத்திரங்களும் தீ விபத்தில் சேதமடைந்துள்ளன.
தீ விபத்தால் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் இழந்துள்ள நிலையில், தற்போது உடுத்துவதற்கு தேவையான உடைகள், சமைப்பதற்கும் சாப்பிடுவதற்குமான பொருட்கள், குழந்தைகளின் கல்விக்குத் தேவையான நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் குடும்பத்தினர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு அதிகாரிகள் உரிய நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நோட்டு, புத்தகங்கள் மற்றும் கல்விப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு, தங்களால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
ஒரே தீ விபத்தில் வீடு மட்டுமல்லாமல், குடும்பத்தின் அத்தியாவசிய ஆவணங்கள், குழந்தைகளின் கல்விப் பொருட்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் இழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்