வட்டவடாவில் கனமழை கொடுத்த பேரதிர்ச்சி! மண் சரிவில் சகோதரர், சகோதரி உயிரிழப்பு – 30 குடும்பங்கள் தனிமை.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வட்டவடா பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி சகோதரர் மற்றும் சகோதரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொட்டக்கம்பூர் அம்மன் கோவில் அருகே இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டக்கம்பூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி சின்னம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர்.
விவசாய நிலத்தில் ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த ஷெட்டின் மீது மண் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்றபோது வீட்டிற்குள் 3 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாலகிருஷ்ணன் மற்றும் சின்னம்மாள் ஆகியோர் உயிரிழந்த நிலையில், பாலகிருஷ்ணனின் மனைவி படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மதியம் 12 மணி முதல் வட்டவடா பகுதியில் கனமழை பெய்து வந்த நிலையில், பிற்பகல் 3 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மண் சரிவில் சிக்கிய இருவரும் மின்சாரம் தாக்கியதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ விசாரணைக்குப் பிறகே உறுதியான தகவல் தெரியவரும்.
பாலம் உடைந்து 30 குடும்பங்கள் தனிமை
இதனிடையே, வட்டவடா பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கொட்டக்கம்பூர் பகுதியில் உள்ள பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொட்டக்கம்பூர்–தட்டாம்பாறை சாலையில் அமைந்திருந்த பாலம் சேதமடைந்ததால், அந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 30 குடும்பங்கள் வெளிப்புறத் தொடர்பின்றி தனிமைப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் சிலரும் மழை மற்றும் சாலை பாதிப்பு காரணமாக சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடுக்கி மாவட்டத்தின் வாகமண், தொடுபுழா உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மண் சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்