உலக ஓசோன் தினம்: மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மருதாடு கிளை நூலகம்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிளை நூலகத்தில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பொறுப்பு நூலகர் ஜா. தமீம் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் ப. லட்சுமிபதி, கவிஞர் கேப்டன் மு. பிரபாகரன், எக்ஸ்னோரா இ. மலர் சாதிக், கற்க கசடற தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மருதாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வெ. ராம்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்றும், மரங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய பசுமைப்படை ஆசிரியர் பி. பிரபாகரன், வளிமண்டல மேலடுக்கு பாதுகாப்பை வலுப்படுத்தவும் சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கவும் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பட்டதாரி ஆசிரியர் இரா. சங்கர் கணேஷ், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பசுமை மற்றும் தூய்மையை கடைபிடித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையடுத்து மருதாடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூலக வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மேலும், நூலக வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் கற்க கசடற தினேஷ்குமார் ரூ.1,000 செலுத்தி நூலக புரவலராக இணைந்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் நூலக உதவியாளர் பிரேமலதா நன்றி கூறினார்.
தமிழக வெற்றிக்குரல்