தேவர் குருபூஜையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல்!
திண்டுக்கல்:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது குருபூஜையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பிட்ட நாட்களில் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அக். 28, 29, 30 ஆகிய தேதிகளில் கட்டுப்பாடு
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் பகுதியில் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் குருபூஜை அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி, அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பட்டியலில் இடம்பெற்றுள்ள 38 மதுக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்படும்.
மேலும், அக்டோபர் 30-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுக்கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமீறினால் கடும் நடவடிக்கை
குறிப்பிட்ட நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி இல்லை. தடையை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்குரல்