தருமபுரியில் உரிமம் இல்லாத 44 நாட்டுத் துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைப்பு! ஆட்சியர் சரவணன் தலைமையில் நிகழ்ச்சி!

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வனத்துறையினர் கைப்பற்றிய 44 உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை மாவட்ட காவல்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நேற்று (அக். 29) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

வனவிலங்கு வேட்டையைத் தடுக்க விழிப்புணர்வு

தருமபுரி மாவட்டத்தில் வனவிலங்குகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் நோக்கில், முதன்மை தலைமை வனப்பாதுகாவலரின் அறிவுறுத்தலின்படி, வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளைத் தாமாக முன்வந்து ஒப்படைக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தருமபுரி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட எட்டு வனச்சரகங்களிலும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட 44 துப்பாக்கிகள்

இந்த நடவடிக்கைகளின் பயனாக, பொதுமக்கள் தாமாக முன்வந்து உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவற்றில் தருமபுரி வனச்சரகத்தில் 11, அரூர் வனச்சரகத்தில் 6, கோட்டப்பட்டி வனச்சரகத்தில் 2, மொரப்பூர் வனச்சரகத்தில் 6, தீர்த்தமலை வனச்சரகத்தில் 12 நாட்டுத் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட காவல்துறையிடம் முறைப்படி ஒப்படைப்பு

வனத்துறையினர் கைப்பற்றிய 44 உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளையும், மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில், மாவட்ட வன அலுவலர் இராஜாங்கம் மாவட்ட காவல்துறையிடம் முறைப்படி ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply