மயிலாடுதுறையில் 847 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.34 கோடியில் உதவி உபகரணங்கள்! எம்.பி. சுதா வழங்கினார்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் என மொத்தம் 847 பயனாளிகளுக்கு ரூ.1.34 கோடி மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. தனியார் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா உதவி உபகரணங்களை வழங்கினார்.

ரூ.1.34 கோடி மதிப்பில் உதவி உபகரணங்கள்

மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின் கீழ், அலிம்கோ நிறுவனம் வாயிலாக இந்த உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. விழாவை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார்.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனூஸ், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதிப்பீட்டு முகாம்கள் மூலம் பயனாளிகள் தேர்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வட்டார அளவில் ஜூன் 19, 20, 22, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும், உட்கோட்ட அளவில் செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளிலும் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான மதிப்பீட்டு முகாம்கள் நடைபெற்றன.

இந்த முகாம்களில் 1,110 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். அவர்களில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 847 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பயனாளிக்கு பேட்டரி மூன்று சக்கர வாகனம்

விழாவில், தரங்கம்பாடியைச் சேர்ந்த ஆனந்தராஜின் கோரிக்கை மனு பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வழங்கினார்.

அதிகாரிகள் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, அலிம்கோ நிறுவன இளநிலை மேலாளர் ரிஷப் மெஹ்ரோத்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply