150 ஆண்டுகள் பழமையான அம்மன் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர எதிர்ப்பு! அய்யனூரில் கிராம மக்கள் போராட்டம்!

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த அய்யனூர் கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுமக்களால் வழிபாடு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் அருள்மிகு ஆதி பெத்தபலி அம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி, கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில் பொறுப்புகளை ஒப்படைக்க நோட்டீஸ்

அய்யனூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்த அம்மன் கோவிலில் பல தலைமுறைகளாக அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து, கோவிலைத் தாங்களே பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, புதுக்கோவில் அருள்மிகு புத்துமாரியம்மன் திருக்கோவில் செயல் அலுவலர் பாலாஜி என்பவர், அய்யனூர் ஆதி பெத்தபல்லி கெங்கையம்மன் திருக்கோவிலின் பொறுப்புகளை ஏற்க உள்ளதாகவும், அக்டோபர் மாதத்திற்குள் கோவில் தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைக்குமாறும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கோவில் வளாகத்தில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்

இதுகுறித்த தகவல் கிராம மக்களிடையே பரவியதைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த பொதுமக்களும் பக்தர்களும் கோவில் வளாகத்தில் திரண்டனர். பல தலைமுறைகளாகத் தாங்களே பராமரித்து வரும் வழிபாட்டுத் தலத்தை அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக் கூடாது என்றும், அனுப்பப்பட்ட நோட்டீஸைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி கோவில் வளாகத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பிரச்சினை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வராத நிலையில், காவல்துறையினரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

150 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்களின் வழிபாட்டில் இருந்து வரும் அம்மன் கோவிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் அய்யனூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Leave a Reply