தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவம்: அதிகாரி பணியிடை நீக்கம்!
பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளில் அலட்சியம் என நடவடிக்கை – சிறைத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்; முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு
சென்னை – அக்டோபர் 31: தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, சிறையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் மெத்தனமாகச் செயல்பட்டதாகக் கூறி பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சிறைத்துறை அதிகாரி ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவைத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பிறப்பித்துள்ளார்.
தேனி மாவட்டச் சிறையில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி இரவு அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, தப்பிச் சென்ற 17 கைதிகளையும் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள், கண்காணிப்புப் பணிகளில் நிலவிய மெத்தனப்போக்கு மற்றும் பணியில் ஏற்பட்ட கவனக்குறைவு ஆகியவை குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி, தேனி மாவட்டச் சிறையில் கடந்த 06.08.2024 முதல் சிறைக் கண்காணிப்பாளர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனித்து வந்த துணைச் சிறை அலுவலர் நா. நாகேஸ்வரன், கைதிகள் மற்றும் பணியாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளில் உரிய கவனம் செலுத்தத் தவறியதற்காகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி, 30.10.2026 முதல் மறு உத்தரவு வரும் வரை இந்தப் பணியிடை நீக்கம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறை நிர்வாகத்தில் கண்காணிப்புப் பொறுப்புடைமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஆர். கிருஷ்ணராஜ், சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படாத வகையில், சிறைத்துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புகளை முழுக் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பணியில் மெத்தனமாகவோ கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டச் சிறையில் 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை நிர்வாகத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் குறித்து அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்