இசை மேதை தேவாவின் நினைவாக சொந்த ஊரில் திருவுருவப்படம் திறப்பு!

ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் – தேவாவின் பிரபல பாடல்களுடன் நடைபெற்ற இன்னிசைக் கச்சேரி.

ராணிப்பேட்டை – அக்டோபர் 31: தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த தேனிசைத் தென்றல் தேவாவின் நினைவாக, அவரது பூர்வீக கிராமமான ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள பழைய மாங்காட்டில் திருவுருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது.

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, அவரது பூர்வீக கிராமமான மாங்காட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், சக்கரமல்லூர் கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தேவாவின் நினைவைப் போற்றும் வகையில் அவரது சொந்த ஊரான பழைய மாங்காட்டில் திருவுருவப்படம் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அவரது உறவினரான சுதாகர் தலைமையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம். சுகுமார் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் கருணா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். இருவரும் தேவாவின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்த பிரபலமான திரைப்படப் பாடல்கள் இன்னிசைக் கச்சேரியாகப் பாடப்பட்டன. தேவாவின் இசையில் உருவான பாடல்களைப் பாடகர்கள் இசையுடன் வழங்கியபோது, கிராம மக்கள், ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் திரளாகக் கலந்து கொண்டு ரசித்தனர்.

தனது இசையால் பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்த தேனிசைத் தென்றல் தேவாவின் நினைவாக, அவரது சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, அவரது இசைப் பயணத்தையும் மக்களின் மனதில் அவர் பெற்றிருந்த இடத்தையும் நினைவுகூரும் வகையில் அமைந்தது.

Leave a Reply