ஓசூரில் உலக பக்கவாத தின விழிப்புணர்வு வாக்கத்தான்! 5 கி.மீ. பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
கிருஷ்ணகிரி: உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாபெரும் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபயணப் பேரணி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மருத்துவமனை மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு
உலக பக்கவாத தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 29-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்களிடையே பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மனித வள மேம்பாட்டுக் கழகம் மற்றும் ரோட்டரி தன்னார்வலர் சங்கம் ஆகியவை இணைந்து இந்த வாக்கத்தான் பேரணியை நடத்தின.
ஓசூர் ராமநாயக்கன் ஏரி மாநகராட்சிப் பூங்கா வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பேரணி தொடங்குவதற்கு முன்னதாக, இசைக்கப்பட்ட உற்சாகப் பாடல்களுக்கு இளைஞர்களும் பொதுமக்களும் நடனமாடி மகிழ்ந்தனர்.
கொடியசைத்துத் தொடங்கி வைத்த மருத்துவமனை இயக்குநர்
இதனைத் தொடர்ந்து, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் லாசியா தம்பிதுரை கொடியசைத்து வாக்கத்தான் பேரணியைத் தொடங்கி வைத்தார்.
ராமநாயக்கன் ஏரி பூங்கா வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, தேன்கனிக்கோட்டை சாலை, உள்வட்டச் சாலை மற்றும் தளி சாலை வழியாகச் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. பக்கவாதம் குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்திச் சென்ற பங்கேற்பாளர்கள், மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து பேரணியை நிறைவு செய்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டு
இந்த வாக்கத்தான் போட்டி 18 வயதுக்குட்பட்டோர், 40 வயதுக்குட்பட்டோர் மற்றும் முதியோர் என மூன்று தனித்தனி பிரிவுகளாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வு, ஓசூர் பகுதியில் பொதுமக்களிடையே பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
தமிழக வெற்றிக்குரல்