திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், ம.மு.கோவிலூர் அருகே அய்யன்குளம் பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்விரோதத்தில் இளைஞர் கொலை

அய்யன்குளம் பகுதியில் கடந்த மாதம் 31ஆம் தேதி முன்விரோதம் காரணமாக மொண்டியபட்டியைச் சேர்ந்த கரண்ராஜ் (27) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் குழந்தைபட்டியைச் சேர்ந்த குமரேசன் (41), யோகேஷ் (27), சரவணபாண்டி (23), மாதவன் (24) மற்றும் தம்பாகுளத்துபட்டியைச் சேர்ந்த சந்துரு (25) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

5 பேர் மீது குண்டாஸ் நடவடிக்கை

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரின் குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் துர்க்காமூர்த்தி 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தாலுகா போலீசார் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த 5 பேர் மீதும் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.

Leave a Reply