ஹரிஹரன்கூடல் பண்டாரவாடையில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய பால்குடம்–காவடி திருவிழா!

மயிலாடுதுறை, செப்.: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, இலுப்பூர் ஊராட்சி, ஹரிஹரன்கூடல் பண்டாரவாடை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் 11-ஆம் ஆண்டு பால்குடம்–காவடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி ஸ்ரீ மகா காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடத்தப்பட்டு விழா தொடங்கியது. முன்னதாக விநாயகர் ஆலயத்தில் இருந்து விரதம் மேற்கொண்ட ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி, அலகு காவடி மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

மேள வாத்தியங்கள் முழங்க, பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பால்குடம் மற்றும் காவடி ஊர்வலம் நடைபெற்றது. இதில் இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

ஊர்வலம் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தை வந்தடைந்ததும், பக்தர்கள் கொண்டு வந்த பால் மூலம் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஹரிஹரன்கூடல் பண்டாரவாடை கிராம மக்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

Leave a Reply