இன்ஸ்டாகிராமில் காதல் வலை… பூஜை செய்வதாகக் கூறி ரூ.10 லட்சம், 25 சவரன் நகை மோசடி!
பெண் குரலில் பேசி ஏமாற்றியதாக 21 வயது இளைஞர் கைது – ஓசூர் போலீசார் நடவடிக்கை!
கிருஷ்ணகிரி – அக்டோபர் 28: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இன்ஸ்டாகிராம் மூலம் பெண் பெயரில் அறிமுகமாகி காதலிப்பதாகக் கூறி, பின்னர் வீட்டில் பூஜை செய்வதாக நம்பவைத்து ரூ.10 லட்சம் பணம் மற்றும் 25 சவரன் தங்க நகைகளை மோசடி செய்ததாக 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பார்வதி நகரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவருக்கு, சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் ‘பிரியா’ என்ற பெயரில் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அந்த நபர் காதலிப்பதாகக் கூறி ஆசைவார்த்தைகள் பேசி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மற்றொரு நபர், தன்னை பிரியாவின் தம்பி ‘அபி’ என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர், குபேந்திரனின் வீட்டில் சில பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறி அவரை நம்பவைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வீட்டில் பூஜைகள் செய்வதுபோல் நாடகமாடி, குபேந்திரனிடமிருந்து ரூ.10 லட்சம் பணம் மற்றும் 25 சவரன் தங்க நகைகளை மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி ஓசூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், பெண்ணைப் போன்று குரலை மாற்றிப் பேசி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர், கிருஷ்ணகிரி கொத்தபேட்டா காலனியைச் சேர்ந்த நித்யராஜ் என்பவரின் மகன் சிவசாரதி (21) என்பது தெரியவந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சிவசாரதியை அக்டோபர் 28-ஆம் தேதி கைது செய்த ஓசூர் நகர போலீசார், அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
சமூக வலைதளத்தில் காதலிப்பதாகக் கூறி அறிமுகமாகி, பின்னர் பூஜை செய்வதாக நம்பவைத்து பணம் மற்றும் நகைகளை மோசடி செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்