பழனி அருகே இம்மானுவேல் சேகரனார் குருபூஜை: அரசியல் கட்சியினர் மலர் அஞ்சலி.

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அழகாபுரி பகுதியில், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 69-ஆவது குருபூஜையை முன்னிட்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

வளரும் தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் பூ. மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

 

நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த பண்ணாடி ராஜா, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த சபரி, பாஜக இளைஞர் அணி மாநில பொறுப்பாளர் கமலேஷ், பாஜக பொறுப்பாளர் சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பொறுப்பாளர் சௌந்தரபாண்டியன், தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியல் இனப் பிரிவிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

 

இதையடுத்து அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வளரும் தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆனந்த், சபரி, அருண், தமிழரசன், செந்தில் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று இம்மானுவேல் சேகரனாருக்கு மரியாதை செலுத்தினர்.

Leave a Reply