பழனி அருகே பயங்கர தீ விபத்து: 140 காய்க்கும் தென்னை மரங்கள் கருகி நாசம் – ரூ.7 கோடி இழப்பீடு கோரிக்கை!
பழனி, செப். 2:
பழனி அருகே விவசாயத் தோட்டத்தில் சிலர் தீயை முழுமையாக அணைக்காமல் சென்றதாக கூறப்படும் நிலையில், அங்கிருந்து பரவிய தீயில் 140 காய்க்கும் தென்னை மரங்கள் தீயில் கருகி நாசமாகின. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் சேதமடைந்ததால், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இரட்டைப்பாடி பகுதியில், ஆண்டிப்பட்டி செல்லும் வழியில் ஆற்றங்கரையோரம் விவசாயத் தோட்டம் அமைந்துள்ளது. முன்னாள் சித்திரைக்குளம் ஊராட்சி தலைவர் தனலட்சுமிக்கு சொந்தமான சர்வே எண் 61/1-ல் அமைந்துள்ள இந்தத் தோட்டத்தில் சுமார் 600 தென்னை மரங்கள் நடவு செய்யப்பட்டு, கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தீயை அணைக்காமல் சென்றதால் விபத்து?
இந்நிலையில், ஆற்றங்கரையோரப் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக அமர்ந்து இறைச்சி சமைத்து சாப்பிட்டுவிட்டு, தாங்கள் மூட்டிய தீயை முழுமையாக அணைக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கிருந்து பரவிய தீ, அருகிலிருந்த தென்னந்தோப்பிற்குள் மளமளவென பரவியது. கொழுந்துவிட்டு எரிந்த தீயில் நன்கு காய்த்து வந்த சுமார் 140 தென்னை மரங்கள் அடுத்தடுத்து தீப்பற்றி முழுமையாக கருகி நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள்
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதேபோல், பழனி தீயணைப்புத் துறையினரும் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, முழுமையாக அணைக்கப்பட்டது.
7 ஆண்டுகளாக வளர்த்த மரங்கள் நாசம்
தான் 7 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தையைப் போல் பராமரித்து வளர்த்த தென்னை மரங்கள் கண்முன்னே தீயில் கருகி நாசமானதால் விவசாயி கடும் வேதனை தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த 140 தென்னை மரங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் என கணக்கிட்டு, மொத்தம் ரூ.7 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தோட்ட உரிமையாளர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஆற்றங்கரையில் அத்துமீறி நுழைந்து தீ மூட்டியதாக கூறப்படும் நபர்கள் மீது போலீசார் உரிய விசாரணை நடத்தி, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தென்னந்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் விவசாயிக்கு ஏற்பட்டுள்ள இழப்பை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்