பழனி இடும்பன் கோவில் நகை திருட்டு வழக்கில் பெண் ஊழியர் சிக்கியது எப்படி? சொகுசு வாழ்க்கையால் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
திண்டுக்கல்: பழனி இடும்பன் கோவிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் 20½ பவுன் தங்க நகைகள் மற்றும் 3 கிலோ வெள்ளி நகைகள் திருடப்பட்ட வழக்கில், கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய பெண் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகைகளைத் திருடி உருக்கி விற்று, கிடைத்த பணத்தில் ஆடம்பரப் பொருட்கள் வாங்கி சுற்றுலா சென்று சொகுசாக வாழ்ந்ததாக இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
20½ பவுன் தங்கம், 3 கிலோ வெள்ளி மாயம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடும்பன் கோவிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் 20½ பவுன் தங்க நகைகள் மற்றும் 3 கிலோ வெள்ளி நகைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருடுபோனது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அறநிலையத்துறை அதிகாரிகளும் கோவிலில் நேரில் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும், ஆரம்பத்தில் திருட்டு தொடர்பாக எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், பழனி துணைக் காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
தற்காலிக ஊழியர் மீது எழுந்த சந்தேகம்!
இந்த வழக்கில், பழனி இடும்பன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய பாப்பம்பட்டியைச் சேர்ந்த நிரஞ்சனா (26) மற்றும் அவரது நண்பரான நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு நிரஞ்சனா கோவிலில் தற்காலிகப் பணியில் சேர்ந்துள்ளார். அப்போது செயல் அலுவலராக இருந்த விமலா வேறு பணிக்குச் சென்றதைத் தொடர்ந்து, அந்தப் பணியிடம் காலியானது. பின்னர் பொறுப்பு செயல் அலுவலராக நரசிம்மன் பொறுப்பேற்றார். அதன்பிறகே கோவில் நகைகள் திருடுபோனதாகப் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் நிரஞ்சனா உள்ளிட்ட கோவில் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அப்போது நிரஞ்சனா மீது சந்தேகம் ஏற்படாத வகையில் அவர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கோவில் நகை திருட்டு வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் கோவில் அறங்காவலர் ராஜா வலியுறுத்தியிருந்தார். மேலும், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
விலை உயர்ந்த செல்போன், கார் பயணம்… போலீசுக்கு ஏற்பட்ட சந்தேகம்!
இதற்கிடையில், கோவிலில் தற்காலிகப் பணியிலிருந்து விலகிய நிரஞ்சனா, விலை உயர்ந்த செல்போன் பயன்படுத்தியதுடன், தனது நண்பர் பிரபாகரனுடன் காரில் மூணாறு, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களின் ஆடம்பர வாழ்க்கை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, நிரஞ்சனா மற்றும் பிரபாகரனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது, கோவில் நகை திருட்டு தொடர்பான தகவல்கள் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது.
நகைகளை உருக்கி விற்றதாக விசாரணையில் தகவல்!
போலீசார் நடத்திய விசாரணையில், நிரஞ்சனா கோவில் நகைகளைத் திருடியதாகவும், பின்னர் பிரபாகரனுடன் சேர்ந்து அவற்றை உருக்கி விற்றதாகவும் தெரியவந்துள்ளது. அதன் மூலம் கிடைத்த பணத்தில் ஆடம்பரப் பொருட்களை வாங்கி, சுற்றுலா சென்று இருவரும் சொகுசாக வாழ்ந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆடம்பர வாழ்க்கை தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை, இந்த வழக்கில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா?
இந்த வழக்கில் நிரஞ்சனா மற்றும் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கோவில் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி இடும்பன் கோவில் நகை திருட்டு வழக்கில், பல மாதங்களாகத் துப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், தற்காலிக ஊழியர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்