பழனி முருகன் கோயில் உள்ளிட்ட 52 கோயில்களில் செல்போனுக்கு முழுமையான தடை – 1ம் தேதி முதல் அமல்!
பழனி, செப். 2:
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் 52 முதுநிலைக் கோயில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கான முழுமையான தடை செப்டம்பர் 1 முதல் தீவிரமாக அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஏற்கனவே செல்போன் பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், சிலர் விதிகளை மீறி கோயில் வளாகத்திற்குள் புகைப்படம், வீடியோ, செல்ஃபி மற்றும் ரீல்ஸ் உள்ளிட்டவற்றை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
விஐபிக்களுக்கும் விதிவிலக்கு இல்லை
உயர்நீதிமன்ற உத்தரவின்படி பழனி மலைக்கோயிலுக்கு செல்போன் எடுத்துச் செல்ல ஏற்கனவே தடை அமலில் இருந்து வந்த நிலையில், தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் புதிய சுற்றறிக்கையின் அடிப்படையில், விஐபிக்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோயில் மற்றும் அறுபடை வீடு கோயில்கள் மட்டுமின்றி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் 52 முதுநிலைக் கோயில்களில் இந்தக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
செல்போன் பாதுகாப்பகங்கள்
பழனி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அடிவாரம் மற்றும் முக்கிய பகுதிகளில் பிரத்யேக செல்போன் பாதுகாப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைத்து செல்லும் வகையில், ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறினால் கடும் நடவடிக்கை
செல்போன் தடையை மீறி மறைமுகமாக கோயிலுக்குள் செல்போனை எடுத்துச் சென்று புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது, ரீல்ஸ் தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், செல்போன் தடையை முறையாக கண்காணிக்கத் தவறும் கோயில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மீதும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் செல்போன்களை பாதுகாப்பகங்களில் ஒப்படைத்துவிட்டு கோயிலுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்