பழனி ரயில் நிலையத்தில் அதிநவீன டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி தொடக்கம்!

பழனி, செப். 2:

பழனி ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பக்தர்களின் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துச் செல்லும் வகையில், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் அதிநவீன டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி இன்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரயில்கள் மூலம் வந்து செல்கின்றனர்.

இதையடுத்து, பழனிக்கு வரும் ரயில் பயணிகள் மற்றும் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களது உடைமைகள் மற்றும் லக்கேஜ்களை பாதுகாப்பாக வைத்துச் செல்லும் வகையில், ரயில் நிலைய வளாகத்தில் அதிநவீன ஸ்மார்ட் டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் அமைக்கப்பட்டுள்ளது.

ரிப்பன் வெட்டி தொடங்கி வைப்பு

டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் சேவை தொடக்க விழா பழனி ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் ரயில்வே வணிகப் பிரிவு ஆய்வாளர் அசோக்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி லாக்கர் வசதியை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலர்கள், ரயில் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.

QR Code மூலம் எளிய பயன்பாடு

இந்த டிஜிட்டல் லக்கேஜ் லாக்கரில் பயணிகள் தங்களது செல்போன் மூலம் QR Code-ஐ ஸ்கேன் செய்து, தேவையான லாக்கரை எளிதாக முன்பதிவு செய்து உடைமைகளை பாதுகாப்பாக வைத்து பூட்டிக்கொள்ளலாம்.

பின்னர், உடைமைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரத்தில் மீண்டும் QR Code-ஐ ஸ்கேன் செய்து லாக்கரை திறந்து பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் நவீன தானியங்கி தொழில்நுட்பத்துடன் இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு பயனுள்ள வசதி

பழனி மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், தங்களது லக்கேஜ்களை ரயில் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்துத் திரும்பும் வரை அச்சமின்றி பயணிக்க இந்த டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பழனி ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த நவீன வசதி, தொலைதூரங்களில் இருந்து ரயில் மூலம் வரும் பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் கூடுதல் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply