பழனி ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்..! செப்.12-க்குள் பணிகள் நிறைவு!

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வருடாந்திர ரோப் கார் பராமரிப்புப் பணிகள் மற்றும் சிவில் மராமத்துப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் விரைவாகச் சென்று சாமி தரிசனம் செய்ய ரோப் கார் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பராமரிப்பின் ஒரு பகுதியாக ரோப் கார் இயக்கத்துடன் தொடர்புடைய இயந்திரங்கள் அனைத்தும் NDT (Non-Destructive Testing) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பரிசோதனையில் கண்டறியப்பட்ட பழுதுகளின் அடிப்படையில் தேவையான உதிரிபாகங்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் புதிய மெயின் ஷாப்ட் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து வரவழைக்கப்பட்டு, செப்டம்பர் 4ஆம் தேதி பழனிக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த ஷாப்ட்டிற்கான NDT பரிசோதனை நடைபெற்று வருகிறது. மேலும், கியர் பாக்ஸ் உள்ளிட்ட முக்கிய இயந்திரங்களிலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய ஷாப்ட் பொருத்தும் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள புதிய ரோப் கார் பெட்டிகள் பொருத்தப்பட உள்ளன.

இதேபோல், ரோப் கார் கீழ்நிலையப் பகுதியில் இயந்திரங்கள் அமைந்துள்ள இடங்களில் புதிய மேற்கூரை, நவீன ஃபால் சீலிங் மற்றும் பக்கவாட்டுச் சுவர்களில் உயர்தர கிரானைட் கற்கள் பதிக்கும் உள்ளிட்ட சிவில் மராமத்துப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த இயந்திரப் பராமரிப்பு மற்றும் சிவில் பணிகள் அனைத்தும் செப்டம்பர் 12ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, ரோப் கார் சேவை மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என பழனி கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதனால், விரைவில் ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உள்ளனர்.

Leave a Reply