பழனி சண்முக நதி, வையாபுரி குளம் சீரமைப்பு..! ரூ.3.65 கோடி நிதி — அமைச்சர் விக்னேஷ் தகவல்!
பழனி:
பழனியில் சண்முக நதி மற்றும் வையாபுரி குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்க ரூ.3.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
பழனியில் நடைபெற்ற தனியார் பேக்கரி திறப்பு விழாவில் அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டார். முன்னதாக கட்சி அலுவலகத்திற்கு வந்த அமைச்சருக்கு, மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன், மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனி N. பாலன், நகரச் செயலாளர் மிதுன் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், பழனி சண்முக நதியை தூய்மைப்படுத்தி சீரமைக்க ரூ.1.75 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கான திட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், திருஆவினன்குடி பகுதி மற்றும் பழனி வையாபுரி குளத்தை சீரமைக்க ரூ.1.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் பாட்டில்கள் சேதமடைவது தொடர்பாக பேசிய அவர், பாட்டில்களை கவனமாக கையாள்வது ஊழியர்களின் பொறுப்பு என்றாலும், ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். பாட்டில்கள் உடையாத நிலையிலும் தவறாக கணக்கு காட்டப்படும் நடைமுறைகளைத் தவிர்த்து, ஊழியர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
பள்ளிகள் மற்றும் ஆன்மிகத் தலங்களுக்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் மதுக்கடைகளை மாற்றுவது தொடர்பாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார். உரிய மாற்று இடத்தை பொதுமக்கள் அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினால், அந்த கடைகளை மாற்ற அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், கேரளாவில் கல்லூரி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாக தெரிவித்த அமைச்சர், இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
வெளிமாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக ஸ்பிரிட் கடத்தப்படுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கள்ளுக்கடைகள் தொடர்பான ஆய்வுகள் நிறைவடைந்த பின்னர் முதலமைச்சர் உரிய முடிவு எடுப்பார் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்குரல்