சண்முக நதியை மீட்டெடுக்க தீவிர முயற்சி..! தன்னார்வலர்களை பாராட்டிய எம்.எல்.ஏ. ரவி மனோகரன்!
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், புனிதத்துவம் வாய்ந்த சண்முக நதியை மீட்டெடுக்கும் நோக்கில் ‘We The Leaders’ அமைப்பினர் மேற்கொண்டு வரும் தூய்மைப் பணிகள் இரண்டாவது வாரமாக தீவிரமாக நடைபெற்றன.
“நம் நதி… நம் பொறுப்பு!” என்ற முழக்கத்துடன் அதிகாலை 6 மணி முதல் நடைபெற்ற இந்தப் பணியில் சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். நதியில் தேங்கியிருந்த நெகிழிப் பொருட்கள், துணிகள், பூஜைப் பொருட்கள், ஆகாயத்தாமரை மற்றும் முட்செடிகள் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டன.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடவும், தீர்த்தம் எடுத்துச் செல்லவும் சண்முக நதி முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கி வருகிறது. பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளுக்கும் இந்நதியின் தீர்த்தம் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சண்முக நதியில் நடைபெற்ற தூய்மைப் பணிகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ரவி மனோகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், நதியை மீட்டெடுக்கும் பணிகளுக்கு அரசு சார்பில் தேவையான அனைத்து ஒத்துழைப்பும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
“சண்முக நதி வெறும் நதி அல்ல; புனித தீர்த்தம்”
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவி மனோகரன், பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் ஆன்மிக வழிபாட்டில் சண்முக நதி முக்கிய இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
காவடி முத்தரித்தல், தோஷம் கழித்தல், புனித நீராடல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளுக்காக ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் சண்முக நதிக்கு வந்து செல்வதாகவும், சிறப்பு வாய்ந்த இந்த நதி கழிவுகளால் பாதிக்கப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாகவும் கூறினார்.
எந்தவித அரசியல் மற்றும் சுயநல நோக்கமுமின்றி இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் நதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது என தெரிவித்த அவர், ‘We The Leaders’ அமைப்பினருக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்
சண்முக நதியை மீட்டெடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக நதியை தூர்வாரி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
மேலும், பழனி வையாபுரி குளம் மற்றும் இடும்பன் குளத்தையும் சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு அடுத்த 10 நாட்களுக்குள் இதற்கான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
பக்தர்களுக்கும் வேண்டுகோள்
அரசு மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சண்முக நதியை தூய்மைப்படுத்தினாலும், அதை தொடர்ந்து பாதுகாப்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பொறுப்பு என்றும் ரவி மனோகரன் தெரிவித்தார்.
புனித நீராடல் மற்றும் தோஷம் கழிக்க வரும் பக்தர்கள் துணிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை நதியில் வீசாமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
எதிர்காலத்தில் பக்தர்களின் வசதிக்காக கலசம் முத்தரித்தல், தோஷம் கழித்தல் உள்ளிட்ட வழிபாடுகளுக்கு தனித்தனி படித்துறைகள் மற்றும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அப்பகுதிகளில் கழிவுகளை சேகரிக்க தொட்டிகள் அமைத்து தினசரி துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சண்முக நதியை மீண்டும் அதன் பழைய புனித நிலைக்கு கொண்டு வர அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என எம்.எல்.ஏ. ரவி மனோகரன் உறுதியளித்தார்.
இந்த ஆய்வின்போது ‘We The Leaders’ அமைப்பின் கனகராஜ், ஞானதண்டாயுதபாணி பக்தர் பேரவை செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழக வெற்றிக்குரல்