பழனி அருகே ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் நீட், பொதுத்தேர்வு சாதனையாளர்களுக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா!

பழனி:

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே புஷ்பத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில், நீட் மற்றும் பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

உடுமலை–பழனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்ற இந்த விழா, பள்ளி தாளாளரும், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் அவர்களின் வழிகாட்டுதலிலும் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.

விழாவில் பிரபல திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் மற்றும் சிந்தனைப் பேச்சாளரான கரு. பழனியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நீட் மற்றும் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி அவர் பாராட்டினார்.

66 சதவீதத்துக்கும் மேல் நீட் தேர்ச்சி

ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 66 சதவீதத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டுவதுடன், எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாத மாணவர்களுக்கும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி அமைந்திருந்தது.

கல்வியே மிகப்பெரிய ஆயுதம்

விழாவில் பேசிய கரு. பழனியப்பன், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கல்வியே மிகப்பெரிய ஆயுதம் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

வசதியான குடும்பப் பின்னணியில் இருந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கும், பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டிய அவர், தடைகள் எதுவாக இருந்தாலும் கடின உழைப்பின் மூலம் அவற்றைக் கடந்து சாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழின் பெருமையை எடுத்துரைத்தார்

தமிழ்மொழியின் சிறப்பு, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் திருக்குறளின் பெருமை உள்ளிட்ட பல்வேறு கருத்துகளையும் மாணவர்களிடம் கரு. பழனியப்பன் எடுத்துரைத்தார்.

பெண்களுக்கு கல்வி மற்றும் சொத்துரிமை உள்ளிட்ட உரிமைகள் கிடைப்பதற்கு சமூக சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பங்களிப்பையும் அவர் நினைவுகூர்ந்தார்.

பெண் குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்வது ஒட்டுமொத்த சமூகத்தின் முக்கியக் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.

நீட் குறித்து கருத்து

நீட் தேர்வு தொடர்பாக தனது தனிப்பட்ட கொள்கை வேறுபட்டதாக இருந்தாலும், மாணவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை கடின உழைப்பின் மூலம் உடைத்து வெற்றி பெற வேண்டும் என கரு. பழனியப்பன் தெரிவித்தார்.

மேலும், பழனி போன்ற நகரப் பகுதியில் இருந்து மாணவர்கள் நீட் தேர்வில் சிறப்பாக சாதிப்பது பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கல்விச் சாதனையை பாராட்டி, அவர்களின் எதிர்கால வெற்றிக்கு ஊக்கமளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழா சிறப்பாக நிறைவடைந்தது.

Leave a Reply