பழனியில் பிராமண ஸமாஜம் மாநில பொதுக்குழு கூட்டம்! இடஒதுக்கீடு முதல் அர்ச்சகர் நலவாரியம் வரை முக்கிய தீர்மானங்கள்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பிராமண ஸமாஜத்தின் மாநில பிரதிநிதித்துவ பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் வைத்தியநாதன், மாநில மகளிரணி செயலாளர் பத்மா இரங்கசாமி, இளைஞரணி செயலாளர் சூரியநாராயணன், அமைப்புச் செயலாளர் ஸ்ரீதர், கொள்கைப் பரப்புச் செயலாளர் வெங்கடேசன் மற்றும் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று, சங்கத்தின் செயல்பாடுகள், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சமூக நலன் தொடர்பான பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

10 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கோரிக்கை

கூட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்படும் 10 சதவீத EWS இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், அர்ச்சகர்கள், புரோகிதர்கள், வேதியர்கள் மற்றும் பூஜாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு உரிய ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு நன்றி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்தியதற்காக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள், அமைப்பு வளர்ச்சி மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இடைத்தேர்தல் ஆதரவு குறித்து விரைவில் அறிவிப்பு

இதனிடையே, வரவிருக்கும் இடைத்தேர்தலில் தமிழ்நாடு பிராமண ஸமாஜம் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், இடைத்தேர்தல் தொடர்பான அமைப்பின் அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்த அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply