உடலை வில்லாக வளைத்து அசத்திய 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள்..! பழனியில் யோகா போட்டி கோலாகலம்!

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி இட்டேரி ரோட்டில் உள்ள ஸ்ரீ மீனாட்சி மங்கள மஹாலில் 39-வது தமிழ்நாடு யோகா ரேங்கிங் சாம்பியன்ஷிப் 2026 போட்டி கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம், திண்டுக்கல் மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம் மற்றும் வாய்ஸ் ஆஃப் பழனி பவுண்டேஷன் ஆகியவை இணைந்து இந்த போட்டியை நடத்தின.

இதில் திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து 5 முதல் 15 வயது வரையிலான 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது யோகாசனத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியில் பங்கேற்ற குழந்தைகள் சூரிய நமஸ்காரம், பத்மாசனம், சிரசாசனம், வஜ்ராசனம், யோகமுத்ரா உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர். குறிப்பாக, சிறு குழந்தைகள் தங்களது உடலை வில்லாக வளைத்து, ரப்பர் போன்று நெளிந்து கடினமான ஆசனங்களை எளிதாக செய்து காட்டியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

குழந்தைகளின் நெகிழ்வுத்தன்மை, உடல் கட்டுப்பாடு மற்றும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திய சாகச ஆசனங்கள் நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

போட்டியில் சிறப்பாக செயல்பட்ட குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

சிறு வயதிலிருந்தே யோகா பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன ஒருமைப்பாடு மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறையை மேம்படுத்த முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் “ஆரோக்கியமான நாளைய தினத்திற்கான யோகா” என்ற கருப்பொருளில் இந்த சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply