பழனி கோயிலில் 89 கிலோ வெள்ளித்தகடுகள்..! சிறப்புப் பூஜையுடன் பணி தொடக்கம்
பழனி:
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயிலில், மகாமண்டப நுழைவுவாயிலில் அமைந்துள்ள இரண்டு சிவன் சன்னதிகளுக்கு புதிய வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி இன்று சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கப்பட்டது.
மலைக்கோயிலில் தொடர்ந்து பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மகாமண்டப நுழைவுவாயிலின் உட்புறத்தில் அமைந்துள்ள இரண்டு சிவன் சன்னதிகளுக்கும் உபயத்திருப்பணியாக வெள்ளித்தகடுகள் பொருத்தப்படும் என சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
இதன்படி, கரூர் பகுதியைச் சேர்ந்த ஜி. பத்ரிநாராயணன், பி. ஹேமலதா, பி. ஹேமந்த், எச். திவ்யா, பி. விக்னேஷ், வி. வைஷ்ணவி, ஜி. விஷ்ணுபிரசாத், வி. சங்கீதா, வி. அஷ்வின் குமார், ஏ. நிகிதா, வி. பிரஜித்குமார் உள்ளிட்ட பக்தர்கள் ஒருங்கிணைந்து இந்த உபயத்திருப்பணியை ஏற்றுக்கொண்டனர்.
இதற்காக நேர்த்தியான கலைநயத்துடன் நுட்பமான நகாஸ் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சுமார் 88 கிலோ 975 கிராம் எடையிலான புதிய வெள்ளித்தகடுகள் திருக்கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்டன.
தொடர்ந்து, இன்று (07.09.2026) காலை திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் முன்னிலையில் வெள்ளித்தகடுகளின் எடை முறைப்படி சரிபார்க்கப்பட்டது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, இரண்டு சிவன் சன்னதிகளிலும் வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணிகள் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், அறங்காவலர்கள், திருக்கோயில் இணை ஆணையர், மலைக்கோயில் கண்காணிப்பாளர்கள், சர்வ சாதகர் மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பழனி கோயிலில் பக்தர்கள் சார்பில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற உபயத்திருப்பணிகள், கோயிலின் ஆன்மிக மற்றும் கலைப்பண்பாட்டுச் சிறப்பை மேலும் மெருகூட்டும் வகையில் அமைந்துள்ளன.
தமிழக வெற்றிக்குரல்