பழனி விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில் வாக்குவாதம் – சிலை கரைப்பு விவகாரத்தில் இந்து அமைப்பினர் எதிர்ப்பு.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சிலை வைப்பது மற்றும் கரைப்பது தொடர்பான விதிகள் குறித்து இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி கோட்டாட்சியர் பிரபு மற்றும் டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 அடிக்கு மேல் சிலைகள் வைக்கக்கூடாது
கூட்டத்தில், 10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் வைக்கக் கூடாது என்றும், செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சிலைகளை சண்முக நதியில் மட்டுமே கரைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சண்முக நதியில் தற்போது போதிய தண்ணீர் இல்லாமல் கழிவுகள் தேங்கியுள்ள நிலையில், அங்கு சிலைகளை கரைப்பது சிரமமாக இருக்கும் என்றும், எனவே தெப்பக்குளத்தில் சிலைகளை கரைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
“விதிகளை மட்டுமே திணிக்கிறீர்கள்” – இந்து அமைப்பினர் எதிர்ப்பு
சிலை கரைப்பு தொடர்பான கோரிக்கைக்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த இந்து அமைப்பினர், விழாவை நடத்துவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராமல் விதிகளை மட்டும் திணிப்பதாக குற்றம்சாட்டி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் உற்சாகமாக கொண்டாடும் விழாவிற்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு நிர்வாகம் ஏன் செய்து தருவதில் தயக்கம் காட்டுகிறது என்றும், பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் ஒருதலைப்பட்சமாக விதிகளை திணிப்பது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால் கூட்டரங்கில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை
இதையடுத்து அதிகாரிகள் இந்து அமைப்பினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் பாதைகளில் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாலையோரங்களில் இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிலைகளை கரைப்பதற்காக சண்முக நதியில் தேவையான தண்ணீர் வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்டிருந்த பதற்றம் தணிந்தது.
தமிழக வெற்றிக்குரல்