தரங்கம்பாடி பேரூராட்சியில் 3 இடங்களில் ரூ.27 லட்சம் மதிப்பில் உயர்கோபுர மின்விளக்குகள் திறப்பு.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்று முக்கிய இடங்களில், மத்திய அரசின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள் திறந்து வைக்கப்பட்டன.

தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பொறையார் பழைய பேருந்து நிலையம், காத்தான்சாவடி பேருந்து நிறுத்தம் மற்றும் தரங்கம்பாடி கடற்கரை ஆகிய மூன்று இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

முக்கிய பகுதிகளில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கூடுதல் வெளிச்சம் கிடைக்கும் வகையில் இந்த மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா கலந்து கொண்டு, பொதுமக்கள் முன்னிலையில் உயர்கோபுர மின்விளக்குகளை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மின்விளக்குகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

இதன் மூலம் பொறையார் பழைய பேருந்து நிலையம், காத்தான்சாவடி பேருந்து நிறுத்தம் மற்றும் தரங்கம்பாடி கடற்கரை பகுதிகளில் இரவு நேரங்களில் கூடுதல் வெளிச்சம் கிடைப்பதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தரங்கம்பாடி கடற்கரை பகுதி சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ள நிலையில், அங்கு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டிருப்பது இரவு நேரங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் உதவும் என கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவி சுகுண சங்கரி குமரவேல், பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி அலுவலர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply