பாலக்கோடு அருகே விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி!
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள ஜோதிஅள்ளி கிராமத்தில் வேளாண்மைத் துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்புழு வளர்ப்பு மற்றும் இயற்கை உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
காலநிலை மாற்றத்திற்கேற்ற வேளாண்மை குறித்து விளக்கம்
பயிற்சிக்கு துணை வேளாண்மை அலுவலர் முருகன் தலைமை தாங்கினார். அப்போது, விளைநிலங்களைப் பாதுகாப்போம் இயக்கத்தின் கீழ் காலநிலை மாற்றத்திற்கேற்ற வேளாண்மை, பயிர் பல்வகைப்படுத்துதல், வறட்சியைத் தாங்கும் பயிர் வகைகள், வேளாண் காடுகள் மற்றும் நுண்ணீர்ப் பாசனம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். மேலும், மண்புழு உரத்தின் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள்
முன்னோடி விவசாயி ரங்கநாதன், விவசாயிகள் தங்கள் வயல்களில் கிடைக்கும் மட்கக்கூடிய வேளாண் கழிவுகளைப் பயன்படுத்தி தரமான மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கினார்.
மண்புழு உரம் தயாரிப்பதற்கு ஏற்ற இடத்தைத் தேர்வு செய்தல், மண்புழு வளர்ப்புப் படுக்கை அமைத்தல், பொருத்தமான மண்புழு இனங்களைத் தேர்ந்தெடுத்தல், மாட்டுச் சாணம் மற்றும் பயிர்க் கழிவுகளை முறையாகப் பயன்படுத்துதல், ஈரப்பதத்தைப் பராமரித்தல், உரம் தயாரிக்கத் தேவையான காலம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு
உதவி வேளாண்மை அலுவலர் விஜயன், உயிர் உரங்களின் பயன்கள், தேசிய பயறு வகை தற்சார்பு இயக்கம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மானியம் வழங்கும் நடைமுறைகள் குறித்து விளக்கினார்.
அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வி, மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பாலக்கோடு மேற்கு ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் அருள்குமார் மேற்கொண்டார். இதில் ஜோதிஅள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
தமிழக வெற்றிக்குரல்