30,000 பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆடுகள்!
100% மானியத்தில் தலா 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் – ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை
சென்னை: ஊரகப் பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 30,000 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கியுள்ளது.
2026–2027-ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், கிராமப்புற மேம்பாடு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய அங்கமாக கால்நடைப் பராமரிப்புத் துறை விளங்குகிறது. இதன் அடிப்படையில், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தகுதியான 30,000 பயனாளிகளுக்கு தலா ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன. இதற்காக 2026–2027-ஆம் நிதியாண்டில் ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு உருவாகும். இதனால் அவர்களின் பொருளாதார நிலை மேம்படுவதுடன், கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கம் கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம், 30,000 தகுதியான பயனாளிகளுக்கு ஆடு வளர்ப்பின் மூலம் சுயவருமானம் பெற உதவும் வகையில் அமைந்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்